திருச்சியில் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி கடனாளியானா காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரில் ஆனந்த் என்ற 26 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக தன்னுடன் பணியாற்றுகின்ற நண்பர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறார். அதன்பிறகு வாங்கிய கடனை திரும்ப தர இயலாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஆனந்த் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு பின்னால் இருந்த மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு மாட்டு கொட்டகைக்கு ஆனந்தின் தந்தை கோவிந்தராஜ் சென்றுள்ளார். அப்போது தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவலர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆனந்த் ரம்மி விளையாடுவதற்காக அதிக கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கண்ணோட்டத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.