கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான். கேரளா மாநிலம் நாட்டிற்கே ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.