இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறையானது ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்தது.
மேலும் அதற்கான அரசாணையும் கடந்த மாதம் வெளியிடப்பட்டு, மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் நிலையில் இன்று காலை திண்டுக்கல்லில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன என கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது, திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ. 5 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என்றும் 3 மாதத்தில் 2 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கி அதிமுக அரசு சாதனை செய்துள்ளதாகவும், நாட்டிலேயே பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அதிக இழப்பீடு தந்தது அதிமுக அரசு தான். அதிமுக அரசு கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது என கூறியுள்ளார். ரூ.2,850 கோடி மதிப்பில் சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.