மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்ததையடுத்து மேலப்பாளையம் பகுதி மக்கள் வெளியில் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடபடுகின்றது. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில், மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியிருக்கும் வகையில் கண்காணிக்கப்படும்.
மேலப்பாளையம் மக்கள் தேவையின்றி வெளியே நடமாடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். முக்கிய சாலைகள், உள் தெருக்களில் அனைத்து வாகனங்களும் இயக்க தடை. பொருட்கள் வாங்கிட வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே நடந்து சென்று வர அனுமதிக்க வேண்டும். உடல்நலக்குறைவு போன்ற அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் நபர்களை கண்காணித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.