கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக ஆட்சியின் சார்பில் ஒரு அதிகாரி கூட மழை நீர் பாதித்த இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை.
இங்கு பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை டெண்டரை ரத்து செய்தது தான். இதற்கு உதாரணம் தான் குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87, 88-வது வார்டுகள். கடந்த ஆட்சியில் மழை நீரை அப்புறப் படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது தற்போது அப்படி எடுக்கப்படுவது கிடையாது. கோயம்புத்தூரில் ஒரு சாலை கூட போடப்படவில்லை. அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் இருக்கும்போது கடந்த ஆட்சியில் 500 சாலைகளுக்காக விடப்பட்ட டெண்டரையும் ரத்து செய்துள்ளனர்.
அரசாங்கம் நிதி இல்லை என்ற கருத்தை சொல்லக்கூடாது. கோவை மக்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். மாநகராட்சிக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் அவர்கள் பணிகளை செய்து முடிக்க விடில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் மக்கள் யாரும் அவரை பாராட்டவில்லை. நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். சென்னையில் இதுவரை எவ்வித பணிகளும் புதிதாக மேற்கொள்ளப்படவில்லை. மழைநீர் தேங்காாமல் இருப்பதற்கு மழை நீர் வடிகால்கள் பணிகள் நாங்கள் கொண்டு வந்தது தான்.
எனவே டிவியில் விளம்பரம் தேடி நடிக்காமல் திமுக அரசு உடனடியாக சரியான வேலையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையை பொறுத்தவரை மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்தாலும் சில பணியிடங்களில் பணிகள் முடிவடையாமல் இருப்பது தான் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை சதவீத பணிகள் முடிவடைந்தது என்பதில் மேயருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. இதனால் எஸ்பி வேலுமணி சொன்னது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.