ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்கும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை திட்ட மையம் முறையாக செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் செய்யப்படும் பணிகள், கணக்குகள் முழுமையாக பதிவு செய்து பதிவேடுகள் சரியாக பராமரிக்க வேண்டும் எனவும், குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வண்டிகளை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, உதவி இயக்குனர் பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர், மாவட்ட வன அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.