கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 20 நாட்களில் 216 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “மாவட்ட அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பூகோள பரவல், மருத்துவ உள்கட்டமைப்பு, உள்கட்டமைப்பு பயன்பாடு, மனிதவளம், கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலேயே முடிவுகளை எடுக்கும் அடிப்படையில் தகவல்கள் இருக்க வேண்டும். அதன் மூலமாக உள்ளூர் அளவில் கொரோனா மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க முடியும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மாநில அரசுகளும், ஒன்றியப் பிரதேச அரசுகளும் முடிவு எடுக்கலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது .இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி ஒன்றிய சுகாதாரத்துறை செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அப்போது ஊரடங்கு அறிவிக்க தயக்கம் வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மோடி உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.