கனடாவின் புகைப்படக் கலைஞர் அதிக விஷம் உள்ள சிலந்தியை கண்டறிந்து போட்டோ எடுத்துள்ளார்.
கனடா நாட்டின் ஒன்டாரியோவை பகுதியில் பிரபல புகைப்படக் கலைஞராக கில் விசன் வசித்து வருகின்றார். இவர் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் எனும் விருதை வென்றுள்ளார். இதனையடுத்து ஈக்வடாரின் நாபோவில் கில் விசன் தங்கி இருந்தபோது தனது அறையில் சிறிய சிலந்திகள் ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார். அதன்பின் அந்த சிறிய சிலந்திகள் எங்கே போகிறது என்பதை கண்டறிய கில் விசன் அதற்கு பின்னால் சென்றுள்ளார். இந்நிலையில் தனது அறைக்கு அடியில் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றான பிரேசிலிய வான்டரிங் ஸ்பைடரை கில் விசன் கண்டுபிடித்துள்ளார்.
அந்த கொடிய சிலந்தியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு அதை கில் விசன் புகைப்படம் எடுப்பதற்கு முடிவு செய்தார். அதன்படி ஸ்பைடர் கூட்டத்தில் இருந்த மிகப்பெரிய சிலந்தியை கில் விசன் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை “தி ஸ்பைடர் ரூம்” என்ற பெயரில் கில் விசன் டுவிட்டரில் பதிவிட்டார். இவ்வாறு கண்டறியப்பட்ட பிரேசிலிய வான்டரிங் ஸ்பைடர் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது வாழை சிலந்தி என்றும் அழைக்கப்படும். இவை இரவில் காடுகளில் சுற்றித் திரிந்து சிறிய பூச்சிகள் முதல் தவளைகள் வரை உணவாக உண்ணும். இந்த சிலந்தி மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விஷத்தன்மை வாய்ந்ததாகும்.