2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தவமணி தேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடைசியாக 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றதாகவும். இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக ஓபிசி வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தும் தனியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த கணக்கெடுப்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு முறையாக இல்லாததால் இட ஒதுக்கீட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதனால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைப்படி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி வகுப்பினரை தனியாக கணக்கெடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் திரு கிருபாகரன், திரு புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 1992ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஓபிசி கணக்கெடுப்பில் என்ன தயக்கம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.