சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வழக்கு விவரம்:
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், மே 4 தேதி முதல் தமிழகத்தில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவை இயங்க நிபந்தைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள் மத வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. 33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என நேற்று முன்தினம் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் தொடர்ந்த இந்த மனுவில் மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவை இல்லாத மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு, மக்களின் மனதின் நம்பிக்கை வளர்க்க கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்காதது வருத்தம் அளிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் நிதி நிலைமை பாதிக்கப்படும் என சில நிறுவனங்களை இயக்க அனுமதி அளித்த அரசு, மனதளவில் பாதிக்கப்படுபவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளுடன் இந்த நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியாத நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் மே 11ம் தேதி (திங்கட்கிழமை) அன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.