தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு விவரம்:
சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் தொடர்ந்த இந்த மனுவில் மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவை இல்லாத மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு, மக்களின் மனதின் நம்பிக்கை வளர்க்க கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்காதது வருத்தம் அளிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் நிதி நிலைமை பாதிக்கப்படும் என சில நிறுவனங்களை இயக்க அனுமதி அளித்த அரசு, மனதளவில் பாதிக்கப்படுபவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளுடன் இந்த நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியாத நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
வழக்கு தள்ளுபடி:
இந்த வழக்கு கடந்த மே 11ம் தேதி (திங்கட்கிழமை) அன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக அரசு விளக்கம் தரக்கோரி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் வாதிட்டார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.