தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். அதன் பிறகு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் காவல்துறையினர் அதிரடி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த கஞ்சா வேட்டையில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, கிலோ கணக்கிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா 3.0 திட்டத்தின் மூலம் கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 1.84 கோடி மதிப்பிலான 1610 கிலோ கஞ்சா மற்றும் 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 127 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதோடு, 8.83 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.