காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, அக்கமாபுரம், குணகரம் பாக்கம், எடையார்பாக்கம், ஏக்னாபுரம், மடப்புரம், மேல்பெடவூர், நெல்வாய், தண்டலம், வளத்தூர், பரந்தூர் ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி தமிழகத்தின் 2-வது பெரிய பசுமை விமான நிலையம் அமைய இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மேலேறி, நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் ஏகனாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள குடியிருப்புகளும் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு ஏராளமான விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் தொடர்ந்து பல்வேறு விதமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏனெனில் விமான நிலையம் அமைந்தால் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரமே பறிபோய்விடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த 77 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்கள், கிராம சபை கூட்டத்திலும் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், வருகிற 17-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது 13 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் சட்டசபை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்த இருக்கின்றனர். மேலும் போராட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தற்போது இருந்தே கிராம மக்கள் தொடங்கியுள்ளனர்.