கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்..
சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இருக்காது எனவும், அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.. மேலும் நீதிமன்ற அனுமதியுடன் தான் இந்த விசாரணை நடக்கிறது என்றார்..
இதனால் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு பதிவு செய்து அமளியில் ஈடுபட்டனர்.. சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.. அதனை தொடர்ந்து பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அதேபோல கூட்டணி கட்சிகளான பாஜக, பாமகவும் வெளிநடப்பு செய்தது.. கலைவாணர் அரங்கின் வெளியே உட்கார்ந்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது..
இதனை தொடர்ந்து அதிமுகவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது.. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீண்டும் விசாரணை நடத்துவது சட்டப்படி தவறானது.. என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கின்றனர்.. எதிர்க்கட்சித் தலைவர் எனக்கே இந்த நிலை என்றால்.. சாதாரண மக்களின் நிலை என்ன?.. பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்தார்..
மேலும் அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியிலே தொய்வின்றி பணியாற்றும் கட்சி அதிமுக என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.. மக்களை திசை திருப்புவதற்காகவே வழக்கு பதிவு செய்கின்றனர் என்று கூறினார்..