ஓபிஎஸ் தனது மகனுக்காக பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எம்.எல்.ஏ ராமசந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் .
அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டை தலைமையால் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா நேற்று பத்திரிகையாளர்களிடம் குற்றம் சாட்டும் வகையில் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு தற்போது ஒற்றை தலைமை மிக அவசியம் என்று அவர் கூறிய கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குன்னம் ராமச்சந்திரன் எம்எல்ஏ இதற்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
முதல்வரும் துணை முதல்வரும் சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவ்வபோது கட்சிகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறிய ஒற்றை தலைமை கருத்திற்கு எனது முழு ஆதரவையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுக்குழுவிலும் இதுகுறித்து எடுத்துரைப்போம் என்று அவர் தெரிவித்தார். மேலும் தனது மகனுக்கு ஓபிஎஸ் பதவி கேட்டதாக வெளியான தகவல் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.