2023க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம்,
வீட்டு வசதி வாரியம் மூலம் 24,347 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 300 சதுர அடியில் 1,11,825 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், 1,47,608 வீடுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 22,264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாகவும், 48,938 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் 5 ஆயிரத்திலிருந்து 10ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.