எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில் OPS உறுதியாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேலூரிலுள்ள ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது பிரச்சாரத்தில் அதிமுக-வின் பல்வேறு நலத்திட்ட பணிகள் பற்றி மக்களிடம் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் தி.ரு ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமிய மக்களை அதிமுகவிடம் இருந்து பிரித்து விடலாம் என்று பல்வேறு தவறான செய்திகளை பரப்புவதாகவும், இந்த தேர்தல் அவருக்கு மிகப்பெரிய பாடமாக அமையும் என்றும் கூறினார்.
2006 முதல் 2011 வரை மின்சார தட்டுப்பாட்டை தீர்க்கமுடியாத அரசாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு , எங்கும் ஜாதிச் சண்டை, மதச்சண்டைகளுமாகத்தான் திமுக ஆட்சி இருந்தது, இவை அனைத்தையும் தீர்த்துவைத்தது அம்மாவின் அதிமுக அரசு தான், திமுக கட்சியானது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்றிருக்கிறது. எந்த காலத்திலும் திமுக ஆட்சியானது தமிழகத்தில் வரவே முடியாது என்று கூறினார்.