தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி கூறியதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழலில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன். யாருக்காக தொடங்கினேன் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பழனிசாமி முதல்வராக இருந்ததை எதிர்த்து தான் நான் வாக்களித்தேன். அப்போது தங்கமணியும் வேலுமணியும் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்.
அப்படி கொண்டு வந்தால் திமுக ஓட்டு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓட்டு, உங்கள் ஓட்டு எல்லாம் சேர்ந்தால் அதிமுக ஆட்சி கவர்ந்து விடும் என்ற நிலையில் பதற்றத்தோடு தான் என்னை வந்து சந்தித்தார்கள். அதனைத் தொடர்ந்து சசிகலா அணியில் இருந்து இவர்கள் பிரிந்துவிட்ட டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்தை அவரோடு சேர்ந்து நான் ஆதரித்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அரசுக்கு நான் தந்த ஆதரவினால் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது என்பது தான் உண்மை. அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர் என்னை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செயல்பட்டார் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இதனையடுத்து அவர் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அது உரிய நேரத்தில் வெளியிடப்படும். தேவையில்லாமல் பொய் பேசக்கூடாது. உண்மைகளை எல்லாம் நான் சொன்னால் எடப்பாடிக்கு தான் அவமானமாக போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.