கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, அரசியல் நோக்கத்தோடு அல்ல. இப்ப கூட ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். 234 தொகுதிகள் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை முதலமைச்சருடைய அலுவலகத்திற்கு தெரிவிச்சா, அதையும் தீர்த்து வைக்கிறோம், அப்படின்னு ஒரு உறுதி எப்படி கொடுத்துள்ளோம்.
அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், அந்த பிரச்சினையை தீர்த்து வைப்போம் அப்படின்னு சொல்லி இருக்கோம். இதுதான் திமுக, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆக இப்படிப்பட்ட நிலையிலே இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கின்றது. தேர்தல் நேரத்திலேயே சொன்ன உறுதிமொழி இன்னும் உண்டு. அதில் முக்கியமாக எதுன்னு சொன்னா ? முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய மறைவு. அது ஒரு சஸ்பென்சாவே இருக்கு. நாம் சொல்லல, அவங்க கட்சிக்குள்ளேயே சொன்னது. அன்னைக்கு முதலமைச்சராக இருந்தவர், அதற்கு பிறகு துணை முதலமைச்சராக இருந்தவர்.
அந்த கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடியவர், அம்மையார் எப்போதெல்லாம் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார்களோ, பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கிறார்களோ, அவரின் பதவிக்கு எப்போதெல்லாம் நீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பு வருதோ, அப்போதுதான் முதலமைச்சராக இருந்து பணியாற்றியவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்.
அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பிரச்சனைகளில் அவர், கோபத்தோடு, ஆத்திரத்தோடு, அந்த அம்மையார் உடைய நினைவிடத்தில் போய் உட்கார்ந்துகிட்டு ஆவியோடு பேசுறேன், அப்படின்னு உட்கார்ந்தார். அங்கே போய் தியானம் பண்ணினார், நீதி கேட்டார். இப்படி எல்லாம் நடந்துச்சு என அதிமுக சண்டைகளை குறிப்பிட்டு பேசினார்.
அந்த அம்மையாருடைய மரணத்துல மர்மம் இருக்குன்னு அவரே சொன்னாரு, ஓபிஎஸ்ஸை சரி செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷன் அன்னைக்கு இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் ஒரு கமிஷன் அமைஞ்சது. அந்த கமிஷன் எவ்வளவு வருஷம் நடந்துச்சு உங்களுக்கு தெரியும் ? சும்மா ஒப்புக்காக நடந்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் நாம சொன்னோம். நாம ஆட்சிக்கு வந்தால் இந்த கமிஷன முறையாக நடத்தி, முறையான அறிக்கையை பெற்று, முறையாக நடவடிக்கை இந்த ஆட்சி எடுக்கும் அப்படின்னு உறுதிமொழி கொடுத்தோம். 5, 6 நாட்களுக்கு முன்னால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள், அந்த அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். அந்த அறிக்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதெல்லாம் நான் இப்ப சொல்ல மாட்டேன், சட்டமன்றத்தில் வரும்.
ஏனென்றால் வெளிப்படையாக வைக்கிறோம். எங்களுக்குள்ள வச்சுட்டு நாங்க முடிவு எடுக்க மாட்டோம். சட்டமன்றத்தில் வைத்து, வெளிப்படையாக வச்சு, அதுக்கு உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி காட்டுவோம் என்ற உறுதிய நான் இந்த நேரத்துல தெரிவிச்சிக்கிறேன் என கூறினார்.