தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து,
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்து உள்ளோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வமும் நான்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர். தற்போது வரை நான் தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கின்றது. இதனால் மீண்டும் பன்னீர்செல்வம் இன்று காலை தமிழக சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், அதிமுக தொடர்பான எந்த விவகாரங்கள், முடிவெடுத்தாலும் தன்னை அழைக்காமல் எடுக்கக்கூடாது. நான் தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தற்போது எதிர்க்கட்சித் துணை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கடிதத்திற்கு பதிலடியாக சபாநாயகருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர் பி உதயகுமார் இருக்கின்றார். எனவே அலுவல் ஆய்வு கூட்டம் தொடங்கி, எதிர்க்கட்சி துணை தலைவருக்கான எந்த விஷயமானாலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அழைக்க வேண்டும். அதேபோல் அவருக்கான இருக்கைகளையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தற்போது கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிமுகவின் துணை கொறடா சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார். இதனால் மீண்டும் அதிமுக விவகாரம் தமிழக அரசியலில் பேசு பொருளாகி உள்ளது.