அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அதிமுக தலைமை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை (23ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் , ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்களை நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் நாங்குநேரி தொகுதிக்காக பெற்றுள்ளனர். அதேபோல ஆர் வேலு, முத்தமிழ்செல்வன், கே பன்னீர் உள்ளிட்டோர் விக்கிரவாண்டி தொகுதிக்காக விருப்பமனு பெற்றுள்ளனர்.
மேலும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர். விருப்பமனுக்களை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றும், அத்துடன் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமையகத்தில் நாளை 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.