சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இருக்கிறார். இங்கு நிதி பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து எடுத்து செல்ல முடியாததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தற்போது குடிநீர் விநியோகப் பிரச்சனையும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நிதி பற்றாக்குறை குடிநீர் வினியோகத் திட்டத்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக கவுன்சிலர்களை தேவையில்லாமல் பேசக்கூடாது என மேயர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் போது குடிநீர் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மேயரின் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் முயற்சி செய்தனர். இவர்களை திமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினர். இதனால் அதிமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வெளியே நின்று மேயரு க்கு எதிராக பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் எவ்வித சிக்கலும் இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.