சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கருவுற்ற சிறுமியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்றும், அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கருவை கலைக்க உத்தரவிடவும் கோரினார்.
இதையடுத்து, மருத்துவர்கள் குழுவை அமைத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து கருவை கலைக்கச் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டனர். மேலும் அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இடைக்கால இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.