2 நாட்களாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்த பெண் யார் என்று அடையாளம் தெரியவந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் ரைஸ்மில் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெண் ஒருவர் யாரோடும் பேசாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தார். ஆகவே அந்த பெண் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு யாராவது உணவு கொடுத்தாலும் அதை அவர் வாங்கி சாப்பிடாமல் இருந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இந்த செய்தியை படித்த அந்த பெண்ணின் உறவினர்கள் கொடுத்த தகவலின்படி அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சிவகாமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் ஆப்பக்கூடல் காவல்துறையினரிடம் வந்து சிவகாமியின் அடையாள அட்டையை காண்பித்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவகாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வழிதவறி வந்துவிட்டது தெரியவந்தது.