அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலை கோபாலிடம் தனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும், யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கோபால் தனது மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தரும்படி ஏழுமலையிடம் கூறியுள்ளார்.
அதற்காக அவர் ஏழுமலையிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் ஏழுமலை கோபாலின் மகளுக்கு வேலை வாங்கித் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோபால் தனது மகன் மற்றும் மனைவி ஆகியோருடன் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சிவா, கோபால் மற்றும் விசாலாட்சி ஆகியோர் ஏழுமலையை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து சிவா உள்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.