அரியலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் கிராமங்கள் தோறும் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி கொள்ளை தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வெளியே இருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியேயும் செல்ல முடியாதவாறு கட்டைகளை வைத்து தடுத்து அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த தடை செய்யப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறார்களா என்பதை கண்டறிய கோட்டாட்சியர் அமர்நாத் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.