சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு பணம் எடுப்பதற்காகவும், நகைகளை அடகு வைக்கவும், அடமானம் வைத்த நகைகளை மீட்பதற்காகவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் ஒன்று கூடி உள்ளனர். இதனையடுத்து வங்கியின் முன் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வங்கிக்கு உள்ளேயும், வெளியேயும், ஒருவரை ஒருவர் தள்ளியும், நெருங்கியும் நின்றதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சுபாஷினி, துணை தாசில்தார் விமலா மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து அதிகாரிகள் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இவ்வாறு ஒன்று கூடி இருந்தால் கொரோனாதொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி சமூக இடைவெளியை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வாடிக்கையாளரிடம் வங்கி உரிமையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை வழங்காத காரணத்திற்காக அதிகாரிகள் ரூபாய் 500 அபராதம் வசூலித்த தோடு வங்கியை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளனர். இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் திரும்ப சென்று விட்டனர்.