மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் சுமார் 108 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மும்பை நகரில் 26-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள மஹாராஷ்டிர மாநில அரசு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள, தக்லி தோகேஷ்வர் என்ற பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் மொத்தம் 450 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட பள்ளியை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து மூடியது. மேலும் அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.