திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால் அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நகைசீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூபாய் 500 முதல் 5000 வரை தவணை தொகையினை செலுத்தி வந்தனர்.இந்நிலையில் சீட்டு முடிவடைந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு நகையை கொடுக்காமல் ஹரிஹரன் காலம் தாழ்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து கடை நான்கு நாட்களாக அடைக்கப்பட்டிருந்தது.
மேலும் இரண்டு நாட்களுக்கு கடை விடுமுறை என்ற பலகையும் கடையில் தொங்க விடப்பட்டிருந்தது .இதனால் நகை சீட்டு பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர் . இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து ஹரிஹரனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஹரிஹரன் தனது பெற்றோர் பலராமன் புஷ்பா மனைவி திவ்யா மகன் அசோக் ஆகியோருடன் கார் மூலம் துறையூர் அருகே உள்ள விடுதிக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று அதிகாலை குடும்பத்தினர் அனைவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் ஐந்து பேரும் நகை பாலிஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை சயனைடு சாப்பிட்டுள்ளனர். அப்போது ஹரிஹரனின் எட்டு வயது மகன் அசோக் துடிதுடிப்பதை பார்த்து அவனை காப்பாற்ற முடிவு செய்தனர் .உடனே அவர்கள் அனைவரும் அறை கதவை திறந்து அசோக்கை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.அப்போது ஓட்டல் ஊழியர்களிடம் விவரத்தை கூறியதால் குடும்பத்தினர் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிஹரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் , சீட்டில் பணம் கட்டிய மக்களுக்கு நகைகளை திருப்பி வழங்க முடியாததாலும் அவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.