ஒடிசா மாநிலத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஒடிசா மாநில அரசும் பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளதாவது: “தேர்வை விட மாணவர்களின் நலனே முக்கியம். தேர்வு நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதனால் பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தேர்வு நடக்காததால் மாணவர்களின் மதிப்பெண்கள் உரிய அளவில் நிர்ணயிக்கப்படும். அரசின் அளவுகோல் குறித்து மாணவர்கள் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு நடத்துவது குறித்து தேர்வு வாரியம் முடிவு செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.