Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரு காகத்தால்…. பற்றி எறிந்த குடிசைகள்…. தஞ்சையில் பரபரப்பு….!!

ஒரு காகத்தால் 3 குடிசைகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பாநகர் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் சுந்தரம் குடிசை வீட்டின் அருகிலுள்ள உயர் மின்அழுத்த கம்பியில் நிறைய காகங்கள் அமர்ந்திருக்கும். இந்நிலையில் உயர் மின்அழுத்த கம்பியில் வழக்கம்போல் ஏராளமான காகங்கள் அமர்ந்திருந்தன. அப்போது திடீரென மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கி ஒரு காகம் தூக்கி வீசப்பட்டது. இதனால் அந்த இடங்களில் பயங்கரமான சத்தம் கேட்டவுடன் சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து வெளியில் சென்று பார்த்தனர்.

அப்போது தூக்கி வீசப்பட்ட காகத்தின் இறக்கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சுந்தரத்தின் குடிசை வீட்டின் மேல் அந்த காகம் விழுந்ததால் அதுவும் பற்றி எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த சுந்தரம் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி குடிசையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து அவர்கள் தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பாய்ச்சி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அப்போது பலத்த காற்று வீசியதால் அருகிலிருந்த ஆனந்தன், சீரங்காய் ஆகியோரின் குடிசைக்கும் தீ பரவியது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் டிவி, பீரோ உள்ளிட்ட முக்கியமான பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் குடிசைகளில் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் சுந்தரம் குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் சீரங்காய், ஆனந்தன் ஆகியோரது குடிசை பாதி எரிந்து சாம்பலானது. மேலும் அந்த வீடுகளில் இருக்கும் பத்திரங்களும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |