குடிநீர் வழங்க வேண்டும் என காலி குடங்களுடன் பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தி குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீவலப்பேரி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாக அப்பகுதிக்கு குடிநீர் வராததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் ஒன்றிணைந்து திடீரென பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யாக்கோபு என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் ஓராண்டு காலமாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வராததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தெரு விளக்கு மற்றும் வாறுகால் பிரச்சனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் குடிநீர், தெருவிளக்கு மற்றும் வாறுகால் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவ்வாறு செல்லும்போது பெண்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் குடிநீர்ப் பிரச்சினையை குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மீண்டும் பெண்கள் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு சென்றனர்.