நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஒரு வருடத்தில் 4 ஆயிரத்து 400 முறை நிலவை வலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தினை ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில் நிலவில் தரையிறங்க முயற்சியில் அதன் லேண்டர் கருவி தரையில் மோதி சேதமடைந்தது.
இருப்பினும் விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நல்லமுறையில் செயல்பட்டு வருவதோடு விண்கலத்தில் உள்ள எட்டுக்கும் அதிகமான உபகரணங்கள் இன்று வரை நன்கு இயங்கி வருகின்றன. இன்நிலையில் சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஒரு வருடத்தில் 4 ஆயிரத்து 400 முறை நிலவை சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஏழு வருடங்கள் நிலவை சுற்றி வர தேவையான எரிபொருள் விண்கலத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது. சந்திரயான்-2ல் உள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் நிலவின் பரப்பை படம்பிடித்து இதுவரை 22 புகைப்படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.