சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் தெரிவித்துள்ளார்
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து சீனா கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையை மறைப்பதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன.
இந்நிலையில் வூஹான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. அதாவது ஏற்கனவே பதிவு செய்திருந்த 2579 என்ற எண்ணிக்கையுடன் 50 சதவீதம் அதிகரித்து 3869 ஆக மாற்றி அமைத்துள்ளனர் என்பதே ஆகும்.
இதனைத்தொடர்ந்து வூஹான் நகரில் மரணத்தின் எண்ணிக்கை உயர்ந்தது போல் சீனாவில் மற்ற இடங்களிலும் பலி எண்ணிக்கை மாறுபடுமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் கூறியதாவது, “பாதிப்புகள் மற்றும் இழப்புகளை அடையாளம் காணும் பணி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.
பல நாடுகள் சீனா போன்ற சூழலில் தான் இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். கொரோனா பதிவுகளை அனைத்து நாடுகளும் மறு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்” எனவும் கூறினார். உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் பேசும்பொழுது மற்ற நாடுகளும் சீனாவை போன்று செயல்பட கூடும் என கூறியதோடு துல்லியமான விவரங்களை விரைவாக தயாரிக்கும்படி அனைத்து நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.