தமிழக மக்கள் நலன் சார்ந்து எங்களின் பயணம் இருக்குமென்று பாஜகவின் புதிய மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 மாதங்களாக காலியாக இருந்த தமிழக பாஜக தலைவருக்கான பொறுப்பில் எஸ்சி / எஸ்டி கமிஷனின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமித்ஷா , மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்று இன்று சென்னை வந்த வரை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பாஜகவின் தலைமையகமான கமலாலயம் வந்த அவர் பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அதில் , தமிழக நலன் சார்ந்து தான் எங்களுடைய பயணம் இருக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக செல்வதுதான் எங்களுடைய இலக்கு. மாணவர்கள் இளைஞர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு இப்போது தலைவர் பதவிக்கு வந்திருக்கிறேன்.
இங்கே இருக்கும் மூத்த தலைவர்கள் வழிகாட்டல் படி பயணத்தை மேற்கொள்வோம். தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். எங்களின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதற்காக அகில இந்திய தலைமை என்னென்ன வழிகாட்டுதலை சொல்லியுள்ளதோ அதை நடைமுறைப்படுத்துவோம். மாநில அளவில் எங்களுடைய நிர்வாகிகளை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விஷயங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
குடியுரிமை திருத்த சட்டம் , NPR போன்ற விவகாரம் தொடர்பாக மார்ச் 20-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5 தேதி வரை உண்மையை உரக்கச் சொல்வோம். எல்லாம் மக்களை நேரடியாக சந்தித்து , குழுவாக அமைத்து ஒவ்வொரு கிராமமாக சென்று இதனுடைய விஷயங்களை கிராம மக்களுக்கு தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் பேசினார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , தேசிய செயலாளர் ஹெச் ராஜா, மூத்த தலைவர் இல கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.