Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, “கொரோனா வைரஸ் பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 19 ஆக உள்ளது. இந்த இரட்டிப்பு விகிதம் ஊரடங்குக்கு முன்னதாக 3 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல நாடு முழுவதும் கொரோனா பாதித்து குணமடைவோரின் மீட்பு விகிதமானது 58%க்கும் அதிகமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 384 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதல்முறையாக புதிய பாதிப்புகள் 18,000த்தை கடந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |