சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறோம்.
பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்களே அதற்கு பலியான நிலையில், அவர்கள் உடலை தகனம் செய்ய விடாமல் தடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜயகாந்த் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள் கொரோனோவுக்கு எதிரான போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என கமலஹாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.