டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக டெல்லியின் மேற்கு, வடகிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்துதான் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு போலவே, சட்டவிரோத பட்டாசு விற்பனைக்கு தடை மற்றும் பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தீ விபத்து தொடர்பான அழைப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.