குடும்ப பிரச்சனை காரணமாக தாய்மாமன் வாலிபரை தாக்கி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மநாபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்மநாபன் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனும் பழனிகவுண்டன் புதூரில் இருக்கும் இவரது தாய் மாமா கண்ணன் என்பவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து குடும்ப பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த கண்ணன் பளுதூக்கும் கம்பிகள் மற்றும் தடியால் பத்மநாபனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.