பா.ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் வண்ணார்ப்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஊர்வலமாக அண்ணாசாலை, அறிவியல் மையம் ரோடு, கொக்கிரகுளம் மெயின் ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேர்முக உதவியாளர் கணேஷ் குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இவர்களுக்கு மட்டும் இனிப்பு வழங்குவது ஏற்புடையது அல்ல. கொரோனா தொற்று காலத்தில் முழுமையாக பணிபுரிந்த முன் களப்பணியாளர்களான காவல்துறையினர், டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் சேவை மிக முக்கியமானதாக உள்ளது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் கடந்த காலத்தில் தமது உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய சக பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் துணை தலைவர்கள் லட்சுமண ராஜா, டி.வி.சுரேஷ், சீதா குத்தாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.