பாலம் குறுகலாக உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கண்டிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனையடுத்து இந்த பாலத்தை ஒட்டிய சாலை பகுதி பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது. இந்த சாலை உடுமலையிலிருந்து தாராபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளது. அதோடு தொழில் நிறுவனங்களுக்கும், மேம்பாட்டு பணிகளுக்கும் சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்கும்போது தவறி விழுந்து விபத்துகள் நேரிடும் வாய்ப்புகள் உள்ளது. அதிலும் இரவு நேரத்தில் அந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். இதனையடுத்து இந்த பாலத்தை கடக்கும்போது பாதசாரிகள் ஒதுங்கி கூட நிற்க முடியாத அளவிற்கு இருபுறமும் மணல் குவியல்கள் உள்ளது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்கவும், மண் குவியலை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.