பாம்பு தீண்டியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரம்யா ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக தனது வீட்டில் சாக்குப்பை ஒன்றை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சாக்குப்பையில் இருந்த பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்து ரம்யாவை தீண்டியது.
இவ்வாறு பாம்பு தீண்டியதால் வலி தாங்க முடியாமல் ரம்யா அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகிலுள்ளவர்கள் விரைந்து சென்று ரம்யாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளித்த சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.