மனவருத்தத்தில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபேரி பகுதியில் கூலி தொழிலாளியான பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாகவே பரமேஸ்வரனுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் மது குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மாரியம்மாள் தனது கணவரிடம் இவ்வாறு மது குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்றும், இனிமேல் இப்படி செய்தால் நான் எனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று அவரைத் திட்டியுள்ளார். இதனால் பரமேஸ்வரன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் பரமேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் மனைவி தனது கணவர் உடல் கருகிய நிலையில் தீக்குளித்து தற்கொலை கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பரமேஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.