அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு வெளியில் கிடைக்கும் நெல்மணிகளை அவ்வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வருத்தம் அடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் திடீரென்று மழை வந்தால் அந்த நெல்மணிகள் அனைத்தும் வீணாகி முளைத்துவிடும் அபாயத்தில் உள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நிலையத்தில் உள்ள நெல்மணிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.