தென்ஆப்பிரிக்காவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இந்திய துணை தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபராக ஜுமா என்பவர் இருந்துள்ளார். இவர் ஜூலை 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தென்னாப்பிரிக்க நாட்டில் பல இடங்களில் வன்முறை கிளம்பியுள்ளது. இந்த வன்முறையில் இந்திய வம்சாவழியினர் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள், இந்திய அரசாங்கம் தென்னாப்பிரிக்க தூதரை அழைத்து தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் வன்முறையில் குறிவைத்து தாக்கப்படுவது தொடர்பாக தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் டர்பனில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகம் முக்கிய தகவல் ஒன்றை ட்வீட் செய்துள்ளது. அதாவது தென்னாப்பிரிக்காவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் வாழும் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடர்புடைய நிறுவனங்களை இந்திய துணை தூதரகம் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.