Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொந்த பாட்டி என்று பாராது…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாட்டியை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருந்தார். இதில் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் கவுரி தனியாக வசித்து வந்தார். இவரின் மகன் பாண்டியன் ஆர்.என்.புதூர் அம்மன் நகர் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களில் பாண்டியனுக்கு பாபு என்கிற கோபிநாத் என்ற மகன் இருக்கின்றார். இவர் அடிக்கடி தன் பாட்டி கவுரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். ஆனால் கேட்ட போதெல்லாம் கோபிநாத்துக்கு பாட்டி பணம் கொடுக்கவில்லை. இதனால் பாட்டி அணிந்து இருந்த நகைகளின் மீது கோபிநாத் கண் வைத்ததாக தெரிகிறது. கடந்த 6.7.2011 தேதியன்று கோபிநாத் அவரது நண்பரான விஜயன் என்பவருடன் பாட்டி வீட்டுக்கு வந்தார். அப்போது பாட்டியிடம் கோபிநாத் நைசாக பேசி அவரை பெருமாள் மலை பகுதியில் உள்ள கியாஸ் நிறுவனம் பகுதிக்கு அழைத்து வந்தார்.

அங்கு தன் சொந்த பாட்டி என்று பாராது கோபிநாத் கவுரியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாபு என்கிற கோபிநாத், விஜயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதுமட்டுமின்றி கோபிநாத் பாட்டியிடம் இருந்து கொள்ளையடித்த நகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பாபு என்ற கோபிநாத் தன் பாட்டியை கொன்ற குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை கோபிநாத் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

மேலும் பாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக கோபிநாத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இதை செலுத்த தவறினால் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனைகளை கோபிநாத் ஏககாலத்தில் அனுபவிக்க அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார். இதன் காரணமாக கோபிநாத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் போலீஸ் தரப்பில் முன்னாள் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜராகி வாதாடினார். இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பின்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வக்கீல் ஜெயந்தி உடன் இருந்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட விஜயன் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

Categories

Tech |