மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்கிளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமான மகன் மற்றும் மகள்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் துரைப்பாண்டி மற்றும் முத்துக்கிளி மட்டுமே வாழவல்லான் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துக்களி தனது வீட்டின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கான காலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற மர்ம நபர் ஒருவர் முத்துக்கிளி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக அங்கும், இங்கும் பார்த்துள்ளார்.
இதனையடுத்து அந்த மர்மநபர் அங்கு யாரும் இல்லை என அறிந்து கொண்டு அங்கிருந்த கட்டையை எடுத்து திடீரென முத்துக்கிளியின் தலையில் பலமாக தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகு அந்த மர்மநபர் முத்துக்கிளி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து வெளியே சென்ற முத்துக்கிளி நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் வராததால் அவரின் கணவரான துரைபாண்டி அங்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு முத்துக் கிளி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியான முத்துக் கிளியை யார் அடித்து கொலை செய்திருப்பார் என்று விசாரித்துள்ளனர். அப்போது முத்துக்கிளியின் கணவரான துரைப்பாண்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிப்பதற்காக இவ்வாறு கட்டையால் அடித்து கொலை செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இறந்த முத்துக்கிளியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தங்கநகை பறிப்பதற்காக மூதாட்டியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.