ராட்சத அலையில் சிக்கி படகு இரண்டாக உடைந்ததில் 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் மீனவரான பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பைபர் படகில் பத்மநாபன், ரோகித், கோவிந்தன், ஹரிஷ் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் கரைக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலையில் படகு சிக்கியது. அதன் பின் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டு படகு இரண்டாக உடைந்ததால் அதிலிருந்த மீன்களும், வலைகளும் கடலில் மூழ்கிவிட்டது.
இதனை அடுத்து பத்மநாபன், கோவிந்தன், ஹரிஷ் ஆகிய 3 பேரும் நீச்சலடித்து கரைக்கு பத்திரமாக வந்து விட்டனர். ஆனால் ரோகித் உடைந்த படகின் பாகத்தை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு கரைக்கு வந்த மீனவர்கள் வேறு ஒரு பைபர் படகில் சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரோஹித்தை பத்திரமாக மீட்டனர்.