மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சசிகுமார் அவருக்கு சொந்தமான பைபர் படகில் அய்யாசாமி, ரகு, சிவசங்கரன் உள்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அய்யாசாமி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கடலில் விழுந்துள்ளார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் இறங்கி அய்யாசாமியை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு மீன் வளத்துறக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி கடந்த 2 நாட்களாக 10- க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அய்யாசாமியின் உடலை மீட்டு நாகை நம்பியார் நகர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடற்கரையில் குவிந்து கதறி அழுதனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் அய்யாசாமியின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.