மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரும், ஒருபால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துவருமான வெண்டல் ரோட்ரிக்ஸ், நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் நேற்று காலமானார். வெண்டல் ரோட்ரிக்ஸின் நண்பரான பாஜக எம்.எல்.ஏ. நிலகாந்த் ஹலர்கர் இதனை உறுதி செய்துள்ளார்.
கோவாவைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ். 2014ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியர் சான்றிதழ் அளித்து கௌரவப்படுத்தியது.
வெண்டல் ரோட்ரிக்ஸ் தான் ஒருபால் ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர். தொடர்ந்து ஒருபால் ஈர்ப்பாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார். தீபிகா படுகோன் முதல் பல முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பு செய்துள்ளார்.
குன்பி பழங்குடியின பெண்களின் சேலை வடிவத்தை புதுப்பித்து குன்பி சேலைகள் என்ற பெயருடன் வெளியிட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரோட்ரிக்ஸ், புத்தகம் எழுதுவது மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணியளவில் அவர் கோவாவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.